ஆன்லைன் சூதாட்டத்தால் தற்கொலை செய்து கொண்ட கல்லூரி மாணவன்

சென்னை டி.பி. சத்திரத்தை சேர்ந்தவர் நிதிஷ் குமார். சென்னை அருகே உள்ள தனியார் கல்லூரியில் பி.சி.ஏ மூன்றாம் ஆண்டு படித்து வருகிறார். கொரோனா ஊரடங்கு காரணமாக கல்லூரிக்கு விடுமுறை ஆதலால் டாட்டூ குத்தும் கடையில் வேலைபார்த்து வந்தார் நிதிஷ் குமார். ஒய்வு நேரங்களில் ஆன்லைன் கேம் விளையாடிவந்துள்ளார். நேற்று கடைக்கு சென்ற நிதிஷ் குமார் இரவு வீட்டற்கு செல்லவில்லை. மறுநாள் காலை நிதிஷ் குமார் பெற்றோர் கடை உரிமையளாரிடம் தொடர்பு கொண்டு கேட்டுள்ளனர். அவர்கள் கடைக்கு சென்று பார்த்தபோது, நிதிஷ் குமார் பைக் கடைக்கு வெளியே நின்றுள்ளது. கடை உள்பக்கம் பூட்டி இருந்தது, கடை உரிமையாளர் மற்றொரு சாவி மூலம் கடை திறந்து பார்த்தபோது நிதிஷ்குமார் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டது தெரியவந்தது. இறப்பிற்கு முன் நிதிஷ் குமார் எழுதியுள்ள கடிதத்தில் “ஆன்லைன் சூதாட்டத்தில் விளையாடி தோற்றுவிட்டேன், தற்கொலை செய்துகொள்வது தவிர வேறு வழி தெரியவில்லை, அம்மா, அப்பா மற்றும் காதலி என்னை மன்னியுங்கள் என்று உருக்கமாக கடிதம் எழுதியுள்ளார்”. நிதிஷ்குமார் தற்கொலைக்கான காரணம் குறித்து, காவல் துறை விசாரணையில் பல திடுக்கிடும் தகவல்கள் வெளியாகியுள்ளன. ரம்மி சர்க்கிள், பப்ஜி, ஐ.பி.எல் போன்ற ஆன்லைன் கேம்களில் பணம் கட்டி விடையாடியுள்ளார். ஆன்லைன் சூதாட்டத்தில் தன் சேமிப்பு முழுவதையும் இழந்துள்ளார் நிதிஷ்குமார். இழந்தப் பணத்தை எப்படியாவது மீட்கவேண்டும் என்று கடையில் உள்ள பணத்தை எடுத்து கேஸ்ட்ரோ க்ளப் எனும் ஆன்லைன் சூதாட்டத்தை விளையாடி, அதிலும் தோற்ற காரணத்தால் மனமுடைந்து தற்கொலை செய்து கொண்டார் என போலீஸ் விசாரணையில் தெரியவந்துள்ளது. மேலும் நிதிஷ் குமார் உடல் பிரேத பரிசோதனைக்கு கீழ்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. வழக்கு பதிவு செய்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். ஆன்லைன் கேம்களால் நிறைய தற்கொலைகள் சம்பவங்கள் நிகழ்ந்து வருகிறது. பெரியவர் முதல் சிறுவர்கள் வரை ஆன்லைன் கேம்களால் பாதிக்கப்படுகின்றன. இதுகுறித்து அரசு நடவடிக்கை எடுக்குமா? என்று அனைவரும் எதிர்பார்த்து இருக்கின்றனர்.