9ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த “செக்குப்   பாறை”..!!

மதுரை மாவட்டத்தைச் சுற்றி தொல்லியல் துறை, ஆய்வுகள் மேற்கொண்டு ஆச்சியரிமூட்டும் வரலாற்று தரவுகளை சேகரித்து வரும் சூழலில், திருமலை நாயக்கர் கல்லூரியின் பேராசிரியர் ஒருவர் தனது பங்கிற்கு 9ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த செக்குக் கல்வெட்டு ஒன்றைக் கண்டறிந்துள்ளார்.
திருமலை நாயக்கர் கல்லூரி வரலாற்றுத் துறை பேராசிரியர் ராஜகோபால். கல்லூரியில் பாடம் எடுப்பது போக, மதுரையைச் சுற்றியுள்ள பகுதிகளில் உள்ள தொல்லியல் படிமங்கள் குறித்து ஆய்வுகளை நடத்தி வருகிறார்.
இந்த ஆய்வுகளின் ஒரு பகுதியாக மதுரை, வாடிபட்டி அருகே உள்ள சரந்தாங்கி, வெ.பெரியகுளம் கிராமங்களில் உள்ள விவசாய நிலங்களை ஆய்வு செய்து வந்துள்ளார். அப்போது விவசாய நிலத்தில் வித்தியாசமான கருங்கல் பாறை ஒன்று இருந்துள்ளது.
அந்த கருங்கல் பாறை செக்குக் கல் போல இருந்துள்ளது. மேலும், அந்தப் பாறையில் பழங்கால தமிழ் எழுத்துக்களும் இருந்துள்ளது. இதையடுத்து பேராசிரியர் ராஜகோபால், இந்த கருங்கல் செக்குப் பாறை குறித்து வரலாற்று ஆர்வலர்கள் சிலருடன் சேர்ந்து ஆய்வுகளைத் தீவிரப்படுத்தியுள்ளார்.
அதன்படி, அந்த செக்குப் பாறை 1300 ஆண்டுகள் பழைமையானது என்பதும், அதிலிருந்த எழுத்துக்கள் மூலம், குறிப்பிட்ட காலத்தில் வாழ்ந்த மக்கள் பெரும்பாலும் எழுத்தறிவோடு இருந்துள்ளனர் என்பதும் தெரிய வருவதாக கூறுகிறார்.இதன் மூலம் தமிழரின் நாகரிகம் மிகவும் பழமையானது என்பதை நிரூபிக்க முடியும் என ராஜகோபால் கூறுகிறார்.

தான் கண்டறிந்த ஆய்வு தகவல்கள் குறித்து ராஜகோபல் கூறியதாவது:
தேனி மாவட்டம் ஆண்டிபட்டி பகுதியில் உள்ள விவசாய நிலங்களில் 4 அடி கல் கண்டெடுத்தேன். ஆய்வுகளின் மூலம் அவை 13ஆம் நூற்றாண்டைச் சேர்ந்தது என்பது தெரியவந்தது. ஒரு கல்வெட்டில், பாண்டிய மன்னர் ஒருவருக்குத் தனது விளைநிலத்தை வழங்கியுள்ளது குறித்து விவசாயி ஒருவர் 7 வரிகளில் எழுதி வைத்துச் சென்றிருக்கிறார்.
வாடிப்பட்டி பகுதியில் செக்குப் பாறை ஒன்றைக் கண்டுபிடித்துள்ளேன். இந்தப் பாறை குறித்து ஆய்வு செய்ததில் 9ஆம் நூற்றாண்டைச் சேர்ந்தது என்பது தெரியவந்தது. அதாவது,முதற்கால பாண்டியர் காலத்துக் கல்வெட்டு.
அந்த செக்கு பாறையைச் சுற்றி வட்டெழுத்துகள் இருந்தன. “காடனுக்க நாடி என்பவர் உருவாக்கித் தந்த செக்” எனப் பொருள் தரும் கல்வெட்டுகள் கண்டறியப்பட்டன. மக்கள் தானியங்கள் அரைக்க இந்த செக் பயன்பட்டிருக்கலாம். இந்த பகுதியில் தொல்லியல் படிமங்கள் அதிகளவில் உள்ளது. இந்த பகுதியில் தொல்லியல் ஆய்வுகள் நடத்தினால், தமிழரின் நாகரிகம் மிகவும் பழமையானது என்பதை உலகிற்கு நிரூபிக்க முடியும்.
இவ்வாறு அவர் கூறினார்.

Tagged:

Leave comment

Your email address will not be published. Required fields are marked with *.