நாமக்கல் மாணவி கனிகா சாதனை..!!

பிரதமர் மோடியின் பாராட்டு மேலும் சாதனைகள் படைக்க ஊக்கம் தருவதாக இருக்கிறது என நாமக்கல் மாணவி கனிகா கூறினார்.
நாமக்கல்லில் பரமத்தி சாலையில் உள்ள இ.பி.காலனியை சேர்ந்தவர் நடராஜன். இவர் லாரி டிரைவராக பணியாற்றுகிறார். இவரது மனைவி ஜோதி. இவர்களுக்கு சிவானி, கனிகா என்ற 2 மகள்கள் உள்ளனர்.
நாமக்கல் கிரீன்பார்க் சி.பி.எஸ்.இ. பள்ளியில் பிளஸ்-2 தேர்வு எழுதிய மாணவி கனிகா நடந்து முடிந்த தேர்வில் 500-க்கு 490 மதிப்பெண்கள் பெற்று சாதனை படைத்தார். இந்த நிலையில் நேற்று வானொலியில் மனதின் குரல் நிகழ்ச்சியின் மூலம் நாட்டு மக்களுக்கு உரையாற்றிய பிரதமர் மோடி, லாரி டிரைவர் நடராஜனின் மகள் கனிகாவுக்கு பாராட்டு தெரிவித்தார்.

இது குறித்து மாணவி கனிகா கூறியதாவது :-
நாட்டின் பிரதமர் என்னை பாராட்டுவார் என நான் எதிர்பார்க்கவில்லை. ஆனால் மனதின் குரல் நிகழ்ச்சி வாயிலாக பிரதமர் மோடி என்னை பாராட்டியது எனக்கு மிகவும் மகிழ்ச்சியை தருகிறது. இதை என் வாழ்நாள் முழுவதும் மறக்க மாட்டேன்.
அதே நேரத்தில் பிரதமரின் பாராட்டு இன்னும் பல சாதனைகளை படைக்க ஊக்கம் தருவதாக இருக்கிறது. எதிர்காலத்தில் நான் டாக்டருக்கு படித்து நரம்பியல் நிபுணராகி சேவை செய்ய விரும்புகிறேன் என்று கூறினார்.
இது குறித்து மாணவியின் தந்தை நடராஜன் கூறும்போது, நான் கனவில் கூட இதை எதிர்பார்க்கவில்லை. நாட்டின் பிரதமர் எனது மகளை பாராட்டி இருப்பது எங்கள் குடும்பத்திற்கு மட்டும் இன்றி, நாமக்கல் மாவட்டத்திற்கும் பெருமை சேர்ப்பதாக உள்ளது என்றார்.
மாணவி கனிகா 10-ம் வகுப்பில் 500-க்கு 475 மதிப்பெண்கள் பெற்று இருந்தார். இவரது சகோதரி சிவானி திருச்சியில் உள்ள தனியார் மருத்துவ கல்லூரி ஒன்றில் 2-ம் ஆண்டு படிப்பை நிறைவு செய்து உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Tagged:

Leave comment

Your email address will not be published. Required fields are marked with *.