கனவு நாயகன் அப்துல் கலாமின் நினைவு தினம் இன்று…!

இன்று கனவு நாயகன் ஏ.பி.ஜே அப்துல்கலாம் அவர்களின் நினைவு தினம்.அறிவியல் ஆசிரியர், அணு விஞ்ஞானி, குடியரசுத் தலைவர், கனவு நாயகன் என பன்முகங்கள் கொண்டவர் ஏ.பி.ஜே அப்துல் கலாம். குழந்தைகள், இளைஞர்களால் எப்போதும் கொண்டாடப்படக் கூடியவர்.
1931 அக்டோபர் 15ஆம் தேதி ராமேஸ்வரத்தில் பிறந்தார். 1954ல் திருச்சி செயிண்ட் ஜோசப் கல்லூரியில் பட்டம் பெற்று, சென்னை எம்.ஐ.டியில் ஏரோ ஸ்பேஸ் இன்ஜினீயரிங் படித்தார். 1958ல் மத்திய அரசின் பாதுகாப்புத் துறையில் வேலைக்கு சேர்ந்தார். பின்னர் விண்வெளி ஆராய்ச்சி மேம்பாட்டுக்காக, இந்திய அரசின் ராணுவ ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டுக் கழகத்தில் இணைந்தார். 1969ல் இந்திய விண்வெளி ஆராய்ச்சிக் கழக திட்ட இயக்குநராக நியமிக்கப்பட்டார்.
அப்போது எஸ்.எல்.வி III ராக்கெட்டைக் கொண்டு, ரோகினி-I என்ற துணைக்கோளை விண்ணில் ஏவச் செய்தார். விண்வெளி ஆராய்ச்சியில் சிறப்பான பங்களிப்பால், 1981ல் இந்தியாவின் மிக உயரிய விருதுகளில் ஒன்றான ‘பத்ம பூஷன்’ விருதைப் பெற்றார். இதையடுத்து ‘பத்ம விபூஷன்’ விருதும் வழங்கி கௌரவிக்கப்பட்டார். 1992ல் பிரதமரின் தலைமை அறிவியல் ஆலோசகராக, ராணுவ ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டுக் கழக செயலாளராக நியமிக்கப்பட்டார்.
1997ல் இந்தியாவின் மிக உயரிய ‘பாரத ரத்னா’ விருதைப் பெற்றார். 1998ஆம் ஆண்டு மே 11ல் பொக்ரானில் அணுகுண்டு சோதனை நடத்தி, உலக நாடுகள் ஆச்சரியப்படும் அளவிற்கு இந்தியாவின் பெருமையை உயர்த்தினார். 2002ஆம் ஆண்டு இந்தியக் குடியரசுத் தலைவராக தேர்வானார். 2007ஆம் ஆண்டு இங்கிலாந்தின் ராயல் சொசைட்டி கிங் சார்லஸ் 2 பதக்கம் வழங்கியது.
2011ஆம் ஆண்டு அப்துல் கலாம் பிறந்தநாளை இனி உலக மாணவர்கள் தினமாக கொண்டாட ஐ.நா சபை அறிவிப்பு வெளியிட்டது. ஏனெனில் தான் செல்லும் இடமெங்கும் மாணவர்களைத் தேடிச் சென்று, பல்வேறு விஷயங்களைப் பகிர்ந்து கொள்வார். “கனவு காணுங்கள், அந்த கனவு உங்களை உறங்க விடாமல் செய்ய வேண்டும்”. இளைஞர்களே வருங்காலத்தின் தூண்கள். அவர்கள் சமூகப் பணி ஆற்றுவது அவசியம்.
குழந்தைகள் பேணிக் காக்கப்பட வேண்டும் என்று எப்போதும் கூறிக் கொண்டே இருப்பார். மாணவர்களுக்கான இடைவிடாது இயங்கிக் கொண்டிருந்த கலாம், 2015 ஜூலை 27ல் இயற்கை எய்தினார். அவரது இழப்பு அறிவியல் துறைக்கு பெரும் நஷ்டமாகும். எண்ணற்றோரின் ஊன்றுகோலாய், இன்றும் இளைஞர்கள் மனதில் சுறுசுறுப்புடன் கலாம் இயங்கிக் கொண்டிருக்கிறார்.

Tagged:

Leave comment

Your email address will not be published. Required fields are marked with *.