ஈரோடு மாவட்டத்தில் மறுதேர்வு…!!!

பிளஸ்-2 தேர்வு எழுதாதவர்களுக்கு இன்று (திங்கட்கிழமை) மீண்டும் பொதுத்தேர்வு நடக்கிறது. இதில் ஈரோடு மாவட்டத்தில் 13 மையங்களில் 31 பேர் தேர்வு எழுதுகிறார்கள்.
தமிழகத்தில் பிளஸ்-2 பொதுத்தேர்வு கடந்த மார்ச் மாதம் நடந்தது. அப்போது 24-ந்தேதி நடந்த தேர்வினை, கொரோனா பீதியாலும், ஊரடங்கு காரணமாகவும் ஏராளமானோர் எழுத முடியாத சூழ்நிலை ஏற்பட்டது. இதில் ஈரோடு மாவட்டத்தில் மட்டும் 1,002 மாணவ -மாணவிகள் இறுதி பொதுத்தேர்வினை எழுதவில்லை.
இதைத்தொடர்ந்து தேர்வு எழுதாத மாணவ-மாணவிகளுக்கு இன்று (திங்கட்கிழமை) மீண்டும் பொதுத்தேர்வு நடத்தப்படும் என்று தமிழக அரசு அறிவித்தது. அதன்படி பள்ளி கல்வித்துறை சார்பில் தேர்வு எழுதாத மாணவ-மாணவிகளிடம் தேர்வு எழுத விருப்பம் கேட்கப்பட்டது. அதில் 23 மாணவிகளும், 7 மாணவர்களும் என 30 பேர் மட்டுமே மீண்டும் தேர்வு எழுத விருப்பம் தெரிவித்தனர்.
அதைத்தொடர்ந்து பள்ளி கல்வித்துறை சார்பில் கடந்த 17-ந்தேதி பிளஸ்-2 பொதுத்தேர்வு எழுதும் அனைத்து மாணவ-மாணவிகளுக்கும் ஹால்டிக்கெட் ஆன்லைன் மூலமாகவும், பள்ளிக்கூடங்கள் மூலமாகவும் வழங்கப்பட்டது. இந்த தேர்வுக்கான வினாத்தாள்கள் ஈரோடு மாவட்டத்தில் 7 இடங்களில் பாதுகாப்பாக வைக்கப்பட்டு உள்ளன.தேர்வுக்கான முன் ஏற்பாடுகள் அனைத்து மையத்திலும் செய்யப்பட்டு தயார் நிலையில் உள்ளது.
இதுகுறித்து பள்ளி கல்வித்துறை அதிகாரிகள் கூறும்போது, ‘ஈரோடு மாவட்டத்தில் பிளஸ்-2 தேர்வு நாளை (அதாவது இன்று) 13 மையங்களில் நடைபெற உள்ளது. இந்த தேர்வினை ஈரோடு மாவட்டத்தை சேர்ந்த 30 மாணவ -மாணவிகளும், திருவள்ளூர் மாவட்டத்தை சேர்ந்த மாற்றுத்திறனாளி மாணவர் ஒருவர் ஈரோடு மாவட்டத்தில் தேர்வு எழுத விருப்பம் தெரிவித்து இருப்பதால் மொத்தம் 31 மாணவ -மாணவிகள் தேர்வு எழுத உள்ளனர்’ என்றனர்.

Tagged:

Leave comment

Your email address will not be published. Required fields are marked with *.