நடிகர் சுஷாந்த் சிங் ரஜ்புத் மரணம்!!! – பாலிவுட்டில் சர்ச்சை மேலோங்கியுள்ளது

இந்தியாவின் பிரபல பாலிவுட் நடிகர் சுஷாந்த் சிங் ரஜ்புத்(Sushant Singh Rajput) தற்கொலை செய்து கொண்டதை அடுத்து வாய்ப்புகள் குறித்த சர்ச்சை எழுந்துள்ளது.
அவர் சென்ற மாதம் 14ஆம் தேதி மாண்டார்.
மனவுளைச்சலால் அவர் தற்கொலை செய்துகொண்டிருக்கக்கூடும் என்று இந்திய ஊடகங்கள் தெரிவித்தன.
வாய்ப்புகள் அதிகமின்றிப் போராடிய பல பாலிவுட் கலைஞர்களில் அவரும் ஒருவர் என்று கூறப்பட்டது.
அதனையடுத்து, பாலிவுட்டில் தகுதியில்லாத குடும்ப உறுப்பினர்களுக்கு வாய்ப்புகள் கொடுக்கும் போக்கை, அவரது மரணம் வெளிச்சம் போட்டுக் காட்டியுள்ளதாய்ப் பலர் சாடியிருக்கின்றனர்.
குறிப்பாக குடும்பங்களால் நடத்தப்படும் திரைப்படத் தயாரிப்பு நிறுவனங்களில் குடும்ப உறுப்பினர்களுக்கு முன்னுரிமை வழங்கப்படுகிறது. இதனால், அவர்கள் தொடர்ந்து திரை நட்சத்திரமாகத் தங்களைத் தக்கவைத்துக்கொள்ள முடிகிறது.
ஆனால் மற்றவர்களுக்கு அந்த வாய்ப்பு எளிதில் கிடைப்பதில்லை. கடினமாக உழைத்து பாலிவுட் கதவுகளைத் தட்டி உள்ளே நுழைந்தவர்களில் ஒருவர் ரஜ்புத்.
பாலிவுட்டில் தன்னைத் தக்கவைத்து கொள்ள Instagram மூலம் ரசிகர்களைத் தொடர்ந்து ஈர்க்க முயன்றார் அவர்.
இருப்பினும், பாலிவுட் திரைப்படத் தயாரிப்பு நிறுவனங்கள் அவருக்குப் போதுமான வாய்ப்புகளை வழங்கவில்லை என்று பிரபல நடிகை கங்கனா ரனாவட் குறைகூறினார்.
நடிகை ரனாவட்டின் காணொளிப் பதிவு பலரால் பார்க்கப்பட்டது, பகிரப்பட்டது.
அதனையடுத்து, பலரும் திரை வாய்ப்புகள் குறித்த தங்கள் ஆதங்கத்தைப் பதிவு செய்துவருகின்றனர்.