9 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி கூட்டுறவு வங்கி ஊழியர்கள் வேலை நிறுத்தம்…!!

9 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி கூட்டுறவு வங்கி ஊழியர்கள் நேற்று வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டனர்.
தமிழகத்தில் 4,473 தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கங்களும், 200 நகர கூட்டுறவு கடன் சங்கங்களும் செயல்படுகின்றன. இந்த வங்கிகள் மூலம் விவசாயிகள் மற்றும் மகளிர் சுய உதவி குழுக்களுக்கு கடனுதவி வழங்கப்படுகிறது.
இந்த நிலையில் தமிழக அரசு விவசாயிகள் மற்றும் சுய உதவிக் குழுக்களுக்கான கடன்கள் இனிமேல் மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி கிளைகள் மூலம் மட்டுமே வழங்கப்படும் என அறிவித்துள்ளது.
இந்த நடைமுறையை மாற்றி ஏற்கனவே உள்ளபடி கடன் உதவி வழங்க வழிவகை செய்ய வேண்டும், ரூ.1 கோடிக்கு மேல் ரொக்க கடன் நடவடிக்கையில் ஈடுபட்டால் வருமான வரித்துறை 2 சதவீதம் வரி விதிக்கிறது.
இதற்கு அரசு விதிவிலக்கு பெற்று தரவேண்டும். அரசு அறிவித்த புதிய மருத்துவ காப்பீட்டுத் திட்டத்தில் கூட்டுறவு சங்க ஊழியர்கள் மற்றும் ரேஷன் கடை பணியாளர்களை சேர்க்க வேண்டும், ரேஷன் கடை ஊழியர்களுக்கு, நுகர்பொருள் வாணிப கழக ஊழியர்களுக்கு இணையான சம்பளம் வழங்க வேண்டும் என்பது உள்ளிட்ட 9 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி நேற்று முதல் காலவரையற்ற வேலைநிறுத்த போராட்டத்தை தமிழ்நாடு மாநில கூட்டுறவு வங்கி அனைத்து பணியாளர்கள் சங்கம் அறிவித்தது.
அதன்படி தமிழகம் முழுவதும் நேற்று தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கி ஊழியர்கள் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டனர். இதனால் தொடக்க வேளாண் கூட்டுறவு சங்கங்கள் மூடப்பட்டிருந்தன. சேலம் மாவட்டத்தில் 217 தொடக்க வேளாண் கூட்டுறவு வங்கிகள் மூடப்பட்டு இருந்ததால் அங்கு பண பரிவர்த்தனை அடியோடு பாதிக்கப்பட்டது.
சேலம், எடப்பாடி, மேட்டூர், ஆத்தூர், வாழப்பாடி, சங்ககிரி, வீரபாண்டி, தாரமங்கலம், ஓமலூர் உள்பட மாவட்டம் முழுவதும் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கங்கள் மற்றும் நகர கூட்டுறவு வங்கிகளும் மூடப்பட்டிருந்தன. அங்கு பணிபுரியும் அனைத்து ஊழியர்களும் நேற்று பணிக்கு வரவில்லை. இதனால் வங்கிகள் வெறிச்சோடி காணப்பட்டன.

Tagged:

Leave comment

Your email address will not be published. Required fields are marked with *.