“சிலம்பம் பாட்டி”…!!!

மகாராஷ்டிர மாநிலம் புனேவைச் சேர்ந்த 85 வயது மூதாட்டி ஒருவர், தன் கம்பு சுற்றும் வித்தைக்காக சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறார்.
கொரோனா வைரஸ் பரவல் காலக்கட்டத்தில் தன் அன்றாட செலவுகளுக்காக அவர் இப்படி சாலைகளிலும் தெருக்களிலும் வித்தைக் காட்டி வருகிறார். இதைத் தொடர்ந்து அவருக்கு உதவிகளும் பாராட்டுகளும் குவிந்து வருகின்றன.
சாந்தாபாய் பவார் என்னும் அந்த மூதாட்டி, இரண்டு கைகளில் சிறிய கம்புகளை வைத்துச் சுற்றி வித்தைக் காட்டும் வீடியோ ஒன்று சில நாட்களுக்கு முன்னர் பல சமூக வலைதளங்களில் வைரலானது. குறிப்பாக பல பாலிவுட் பிரபலங்கள் அவரின் வீடியோவைப் பகிர்ந்து, அவரை தொடர்பு கொள்ள விவரங்களையும் கேட்டிருந்தனர்.
சாந்தாபாய் பவார், சில ஆதரவற்றக் குழந்தைகளையும் பராமரித்து வருகிறார். அவர்களின் அன்றாடத் தேவைகளுக்கும் சேர்த்தே அவர் வித்தைக் காட்டி வருகிறார்.
தனது 8 வயதிலிருந்து இந்த கம்பு சுற்றும் தற்காப்புக் கலையைப் பயின்று வருவதாக சொல்லும் சாந்தாபாய், அதைச் செய்து காட்ட பல இடங்களுக்குப் பயணம் செய்துள்ளதாகக் கூறுகிறார். ஆனால், தற்போதைய கொரோனா வைரஸ் காலக்கட்டத்தில் அப்படியான பயணங்கள் அமைவதில்லை என்றும், அதனால் தான் வீதிக்கு வந்து வித்தைக் காட்டத் தொடங்கியுள்ளதாகவும் குமுறுகிறார்.
“என்னால் மளிகைப் பொருட்களை வாங்க முடிவதில்லை. பல சிறிய குழந்தைகளை உள்ளடக்கிய மிகப் பெரிய குடும்பத்தின் அன்றாடச் செலவுகளுக்கு மிகவும் சிரமப்படுகிறோம். ஆகவே தான் சாலைக்கு வந்து எனது வித்தையை வெளிக்காட்டி வருகின்றேன் . இப்படிச் செய்தால் மக்கள் எனக்குப் பணம் கொடுப்பார்கள் என்கிற நம்பிக்கை” என்று வெளிப்படையாக பேசுகிறார் சாந்தாபாய்.