ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோவிலில் இருந்து மங்கள  பொருட்கள் ஸ்ரீவில்லிபுத்தூர் பயணம்….!!!!

ஸ்ரீவில்லிப்புத்தூர் ஆண்டாள் கோவில் ஆடிப்பூர விழாவில் நாளை தங்கரதப் புறப்பாடு நடைபெற உள்ளது. இதையொட்டி ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோவிலில் இருந்து மங்கள பொருட்கள் ஸ்ரீவில்லிப்புத்தூருக்கு அனுப்பி வைக்கப்பட்டன.
ஸ்ரீவில்லிப்புத்தூரில் பிறந்த ஆண்டாள், பெருமாள் மீதிருந்த பக்தியால் அவருக்கு பூ மாலையுடன் பாமாலை சூட்டியதோடு அவரிடமே மணமாலையும் சூடிக்கொண்டாள். இதனால் ஆண்டாளுக்கு சூடிக்கொடுத்த சுடர்க்கொடி என்ற சிறப்புப் பெயரும் ஏற்பட்டது. ஆண்டாள் மணமுடித்து ஐக்கியமானது ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோவில் என்பதால் ஸ்ரீவில்லிபுத்தூர் கோவிலுக்கும், ஸ்ரீரங்கம் கோவிலுக்குமிடையே சம்பந்த உறவும், மங்கள பொருட்கள் பரிவர்த்தனையும் நெடுங்காலமாக இருந்து வந்தது.
பல்வேறு காரணங்களால் அவ்வழக்கம் இடையில் நின்று போனது. எனினும் இரு ஊர் பக்தர்களின் முயற்சியால் தற்போது நின்று போன அவ்வழக்கம் மீண்டும் புதுப்பிக்கப்பட்டு கடந்த சில ஆண்டுகளாக ஸ்ரீரங்கம் சித்திரைத் தேருக்கு முதல் நாள் ஸ்ரீவில்லிபுத்தூரிலிருந்தும், ஸ்ரீவில்லிபுத்தூர் தேரோட்டத்திற்கு முதல்நாள் ஸ்ரீரங்கத்திலிருந்தும் மங்கள பொருட்களின் பரிவர்த்தனை நடந்து வருகிறது.
அதன்படி, ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோவிலில் ஆடிப்பூர உற்சவம் கடந்த 16-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி நடந்து வருகிறது. கோவில் வளாகத்திற்குள்ளேயே வாகன புறப்பாடுகள் நடந்து வருகின்றன. முக்கிய நிகழ்ச்சியான பெரிய தேரோட்டம் நாளை (வெள்ளிக்கிழமை) நடைபெறவேண்டும். ஆனால் இந்த ஆண்டு ஊரடங்கு நடைமுறையில் இருப்பதால், பெரிய தேரோட்டத்துக்கு தடை உள்ளது. அதற்கு பதிலாக, உபயதாரர்கள் வேண்டுகோளுக்கு இணங்க கோவில் வளாகத்திற்குள் வலம் வரும் வகையில் வடிவமைக்கப்பட்டு,தங்க ரதப் புறப்பாடு நடைபெறவுள்ளது.
ஆடிப்பூரத் தேரோட்டத்திற்கென ஆண்டுதோறும் ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோவிலில் இருந்து ஆண்டாள், ரங்கமன்னார் மற்றும் கருடனுக்கு பட்டு வஸ்திரங்கள் மஞ்சள், குங்குமம், பழங்கள் உள்ளிட்ட மங்கள பொருட்கள் வழங்கப்படுவது வழக்கம் என்பதால், நேற்று மாலை ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோவிலில் இருந்து மங்கள பொருட்கள் ஸ்ரீவில்லிபுத்தூருக்கு அனுப்பிவைக்கப்பட்டன. இவை முறைப்படி இன்று (வியாழக்கிழமை) மதியம் கோவிலில் சமர்ப்பிக்கப்பட்டு, இந்த வஸ்திரங்கள் அணிந்து நாளை பெருமாள்-தாயார் தங்கரதத் தேரோட்டம் கோவில் வளாகத்திற்குள் நடைபெறும்.

Tagged:

Leave comment

Your email address will not be published. Required fields are marked with *.