கோவை ஞானி காலமானார்….!!!

தமிழின் முதுபெரும் எழுத்தாளரும், ஆய்வறிஞருமான கோவை ஞானி உடல்நலக்குறைவு காரணமாக இன்று காலமானார்.
தமிழ்நாட்டில் கோவை வட்டாரத்தில் சோமனூரில் 1-7-1935 இல் பிறந்தார் கோவை ஞானி (வயது 85) இவரது இயற்பெயர் கி. பழனிச்சாமி. அண்ணாமலைப் பல்கலைக் கழகத்தில் தமிழ் இலக்கியம் கற்றவர். அவரது பெற்றோர் கிருஷ்ணசாமி, மாரியம்மாள்.
கோவையில் தமிழாசிரியராக 30 ஆண்டுகாலம் பணியாற்றிய இவர் மார்க்சிய நெறியில் தமிழ் இலக்கியம் குறித்து 30 ஆண்டுகாலத்துக்கும் மேலாக ஆய்வில் ஈடுபட்ட வந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. நீரிழிவு நோய் காரணமாக கண்பார்வை இழந்த இவர் விருப்ப ஓய்வுப் பெற்றார். கண் பார்வையை இழந்த நிலையிலும், இறுதி மூச்சு உள்ளவரை இலக்கியப் பணியாற்றினார்.
மார்க்சிய அழகியல், கடவுள் இன்னும் ஏன் சாகவில்லை?’ உள்ளிட்ட 50-க்கும் மேற்பட்ட நூல்களை கோவை ஞானி எழுதியுள்ளார். 28 திறனாய்வு நூல்கள், 11 தொகுப்பு நூல்கள், 5 கட்டுரைத் தொகுதிகள், 3 கவிதை நூல்களை படைத்திருக்கிறார். நிகழ், தமிழ்நேயம் உள்ளிட்ட சிற்றிதழ்களையும் நடத்தினார்.
கோவை ஞானியின் தமிழ்ப் பணிக்காக புதுமைப்பித்தன் விளக்கு விருது (1998), கனடா தமிழிலக்கியத் தோட்ட ‘இயல்’ விருது (2010), எஸ்.ஆர்.எம். பல்கலைக்கழகத் தமிழ்ப் பேராயம் வழங்கிய ‘பரிதிமாற் கலைஞர்’ விருது (2013) உள்ளிட்ட பல்வேறு விருதுகளைப் பெற்றுள்ளார்.
பன்முகத் தன்மை வாய்ந்த கோவை ஞானி முதுமை மற்றும் உடல்நலக் குறைவு காரணமாக கோவையில் இன்று காலமானார். கோவை ஞானி – இந்திராணி தம்பதிக்கு இரண்டு மகன்கள். மனைவி இந்திராணி சில ஆண்டுகளுக்கு முன் காலமானார்.
ஞானி அய்யாவின் மறைவுக்கு ஆய்வறிஞர்கள், பேராசிரியர்கள், எழுத்தாளர்கள், பத்திரிகையாளர்கள் பலரும் சமூக வலைதளங்களில் இறுதி மரியாதை செலுத்தி வருகின்றனர்.

Tagged:

Leave comment

Your email address will not be published. Required fields are marked with *.